வாசிப்பின் அவசியம்

புதுக்கவிதை 9 ஆகஸ்ட் 2026 சித்தப்பித்தன் 18 பார்வைகள்

என் அலமாரி →

தற்செயலாக ஒன்று
அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்! நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன். ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'! நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது: "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல, நாம் கற்கக் கற்க, வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்! என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே. வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்! வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது! எனவே நண்பர்களே! இன்று நான் உங்கள் முன் உரக்கச் சொல்கிறேன்... வாசிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது நம் அறியாமையை எதிர்த்து நாம் செய்யும் மாபெரும் புரட்சி! புத்தகம் ஏந்தும் கை, பூட்டுகளை உடைத்தெறியும்! வாசிக்கும் விழிகளிலே... புரட்சித்தீ சுடரெறியும்! ஏடெடுப்போம்! அறியாமை இருளையெல்லாம் சுட்டெரிப்போம்! மானுடத்தை அறிவின் சிகரத்திற்குக் கொண்டுசெல்வோம்! புத்தகம் வாசிப்போம்! அறியாமையை வீழ்த்தி புதிய உலகம் படைப்போம்! நன்றி! வணக்கம்!

எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.

— இன்னும் மதிப்பீடு இல்லை
உங்கள் மதிப்பீடு:

கருத்துகள்

இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.

ஒரு கருத்து எழுதுங்கள்

விருப்பம். பொதுவில் காட்டப்படாது.

தொடர்புடையவை

அதே பா வகை

கவிதைகள்

கோரத்தின் அழகு

வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்!
11 ஆகஸ்ட் 2026 8

அதே பா வகை

கவிதைகள்

நிழலின் பிம்பம்

எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்...
11 ஆகஸ்ட் 2026 8

அதே பா வகை