Senneer Anthathi 12 works

Senneer Anthathi

உயிர்களை உருவாக்கும் இறைவி எனப் போற்றும் செந்நீர் அந்தாதி 12 வெண்பாக்கள்.

12 works

On battlefields, the shedding of blood is a symbol of death; but within a woman's womb, it is the ultimate symbol of creation! This poetic cycle celebrates menstruation—long shunned by society as a 'taboo'—as the 'primal glory' that brings forth all life into this world. It is a grand endeavor that honors the natural monthly cycle of a woman's body using classical Tamil, brilliantly mirroring it through 'Anthadhi', a beautifully cyclical poetic form.
1

செந்நீர் மாண்பு

திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல் மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும் செயலது விந்தையின் சீர்.
மாதந்தோறும் பெண்ணின் உடலில் இருந்து உதிரம் வெளிப்படுவது, அவளது உடலுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த மண்ணில் தூய்மையான உயிர்களைத் தோற்றுவிக்கும் இயற்கையின் மிகச் சிறந்த, வியக்கத்தக்கச் செயல் இதுவேயாகும்.
Open this on its own
1
2

கருவாக்கும் குருதி

சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக மண்ணில் மழலை மலரக் கருவாகும் பெண்ணின் உதிரம் பெருமை.
இவ்வளவு சிறப்பான மாதவிடாயைத் 'தீட்டு' என்று சொல்லிப் பெண்களை சமூகம் ஒதுக்கி வைப்பது ஒரு மனக்குறைபாடாகும் (ஊனம்). ஏனென்றால், இந்த மண்ணில் ஒரு குழந்தை நேரடியாக உருவாவதற்குக் காரணமாக இருக்கும் பெண்ணின் உதிரம் தீட்டல்ல, அது மாபெரும் பெருமையாகும்.
Open this on its own
2
3

மலைநிகர் மங்கை

பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில் உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு வலியினைத் தாங்கி மலையென நிற்பாள் பொலிவோடு பெண்ணவள் பார்.
பெருமைக்குரிய இந்த நிகழ்வால் தனது உடலிலும் மனதிலும் ஏற்படும் சோர்வை அவள் துணிச்சலோடு உடைத்தெறிவாள். அறத்தின் வடிவான அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, ஒரு மலையைப் போல உறுதியாக நிற்பாள். அந்தப் பெண்ணின் முகத்தில் உள்ள பொலிவைப் பாருங்கள்!
Open this on its own
3
4

திங்கள் சுழற்சி

பார்இல் நிலவு பவனிவரு தல்போல நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய் உடலைப்பு துப்பித்து உன்னதப் பேற்றை அடையத் தயாரா வாள்.
வானத்தில் நிலவானது எப்படித் தேய்ந்து வளர்ந்து தன் சுழற்சியைச் செய்கிறதோ, அதுபோலவே பெண்ணும் மாதவிடாய் சுழற்சியைக் கடப்பாள். இதன்மூலம் அவள் தன் உடலைச் சீராகப் புதுப்பித்துக்கொண்டு, தாய்மை என்ற உன்னத நிலையை அடையத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள்.
Open this on its own
4
5

உயிர்ப்பயிர் உழத்தி

ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய் காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும் உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும் மதுர நிலமவள் மாண்பு.
அவள் உயிர்களை உருவாக்கும் ஒரு விவசாயியாக (உழத்தி) மாறுகிறாள். அவளைப் பாதுகாக்கும் கருப்பையானது உதிரத்தைக் கசியவிடுகிறது. ஒரு விளைநிலம் எப்படி நீரைப் பாய்ச்சிப் பயிரை வளர்க்கிறதோ, அதுபோல அவள் தன் உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரைச் சுமக்கப் போகும் இனிமையான விளைநிலமாக இருப்பது அவளது மாண்பாகும்.
Open this on its own
5
6

கனிவுறு காப்பு

மாண்புடைய பெண்ணை மதித்துந் தினமுமே காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த பொன்னான தேகம் பொலிவுபெற ஓய்வினை அந்நாளில் ஈதல் அழகு.
இத்தகைய மாண்புடைய பெண்ணை நாம் தினமுமே கருணையோடும் கனிவோடும் மதித்துப் போற்ற வேண்டும். அணிகலன்கள் அணிந்த அவளது பொன்னான உடல் மேலும் பொலிவு பெறுவதற்காக, அந்த மாதவிடாய் நாட்களில் அவளுக்குத் தேவையான ஓய்வைக் கொடுப்பது ஒரு அழகிய செயலாகும்.
Open this on its own
6
7

பழமையிருள் களைதல்

அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும் பழமை இருளைப் பகர்வோம் - முழக்கமிட்டு கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா மட்டற்ற பூப்பு மகிழ்வு.
அழகான இந்த உடல் உண்மையை (மெய்ப்பாடு) எண்ணிப் பயந்து, குறைகூறும் பழமையான மூடநம்பிக்கை இருளை விரட்டியடிப்போம். பெண்ணே! உனக்கெனப் போடப்பட்ட கட்டுப்பாட்டுப் படிகளை உரக்க முழக்கமிட்டு உடைத்து வெளியே வா. எல்லையற்ற இந்த மாதவிடாய் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வேயாகும்.
Open this on its own
7
8

கருப்பையின் விழிநீர்

மகிழ்வுஆய்க் கருப்பை மகவைச் சுமக்கா இகழ்வில் விழிநீர் இதுவே - தகுதியாய்ப் பத்தாம் திங்களில் பச்சிளஞ் சேய்தர சுத்தமாய் ஆக்கும் செயல்.
இந்தக் குறிப்பிட்ட மாதத்தில் கருப்பையானது ஒரு குழந்தையைச் சுமக்கவில்லை என்றால், அதன் ஏக்கத்தால் வெளிப்படும் கண்ணீரே இந்த உதிரப்போக்கு (இதை இகழக் கூடாது). அடுத்த முறை, பத்தாம் மாதத்தில் ஒரு பச்சிளம் குழந்தையைப் பெற்றுத் தர, தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் இயற்கைச் செயலே இது.
Open this on its own
8
9

படைப்பின் இறைவி

செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும் இயற்கையின் அற்புதம் இஃதே - மயக்கத்தால் கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே எல்லாம் இறைவி என்பார்.
தன் செயலால் இந்த உலகத்தையே செழிக்க வைக்கும் இயற்கையின் மிகப்பெரிய அற்புதம் இந்த மாதவிடாய். இதை அறியாத மயக்கத்தால் இழிவாகப் பேசும் மூடர்களைக் கடிந்து ஒதுக்கிவிட்டு, உலகோர் அனைவரும் இந்த உதிரமே அனைத்தையும் உருவாக்கும் இறைவி (தெய்வம்) என்று போற்றுவார்கள்.
Open this on its own
9
10

பிறப்பின் மூலம்

என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று அன்பால் அகிலம் அகமகிழ - முன்பே பிறப்பிற்கும் மூலப் பெருமை இதுவே சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
அறிவில் சிறந்த பெரியோர்கள், இந்த உலகம் அன்பால் மகிழக் காரணமான இது 'புனிதமான இரத்தம்' என்று சொல்வார்கள். உலகிலுள்ள அனைத்துப் பிறப்புகளுக்கும் மூலக் காரணமாக விளங்கும் பெருமை இதுவேயாகும். இதைச் சிறப்பாகப் போற்றுவதே உண்மையான சிறப்பாகும்.
Open this on its own
10
11

உணர்வுகளின் ஊசல்

சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம்.
சிறப்பாகப் பாயும் இந்த உதிரப்போக்கின் வேகத்தால் (ஹார்மோன் மாற்றங்களால்), பெண்ணின் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகள் ஊசல் போல மாறிமாறி ஆடும். அந்த நேரத்தில், கள்ளமில்லாத அந்தப் பெண்ணைக் குறையின்றிப் புரிந்துகொண்டு கனிவாகப் பாதுகாப்பதே தெளிந்த அறிவுடைய மனிதர்களின் திறமையாகும்.
Open this on its own
11
12

அறமெனும் பூப்பு

திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு.
இவ்வளவு திறமைகளையும் இரக்கத்தையும் கொண்ட இந்த மாதவிடாயை, ஒரு தர்மத்தைப் (அறம்) போல நம் மனதிற்குள் வைத்து என்றென்றும் அறிவோம். பெண்மையின் மாண்பு வாழ, அவள் பெண்ணாகப் பிறந்த பெருமையைக் கொண்டாடுவது, இந்த மண்ணில் என்றென்றும் நிலைத்து மிளிரும் வியப்பான ஒன்றாகும்.
Open this on its own
12

The book ends here.

List

Tap an edge, or use the ← → keys. Swipe on a phone.