அர்த்தமற்ற கவிதைகள் 31 படைப்புகள்

அர்த்தமற்ற கவிதைகள்

31 படைப்புகள்

1

மௌனத்தின் சத்தம்

காதுகளைப் பிளக்கும் கண்ணீரின் பெருஞ்சத்தம். எவரும் கேட்கவியலாத உள்ளத்தின் அழுகுரல். வார்த்தைகளால் முடியாத வலிகளின் பேரோசை, தனிமையின் இருளறையில் ஓயாமல் எதிரொலிக்கும் நினைவுகளின் சலசலப்பு. உதடுகள் இறுகப் பூட்டிக்கொள்ள, உயிர் கத்திக்கொண்டிருக்கும் உருவமில்லாப் பேரிரைச்சல்! கேட்பவருக்கோ பேரமைதி, சுமப்பவருக்குப் வேள்வித்தீ! இந்த மௌனத்தின் சத்தம்..! கண்ணீரில்...
இதைத் தனியாகத் திற
1
2

அழுகையின் சிரிப்பு

கண்ணீர்த் துளிகளை கண்களுக்குள் சிறைவைத்து, உதடுகளில் கட்டாயமாய் பூக்க வைக்கும் பொய்நகை. உள்ளே உடைந்தழும் இதயத்தின் ஓலங்களை எவருமறியாமல், உலகத்தின் பார்வைக்காக உடனுக்குடன் அணியும் முகமூடி. கலங்கி நின்றால் காலம் கேலி செய்யுமென்று, ரணங்களின் மேல் தீட்டும் வண்ணப் பூச்சு... வலியின் உச்சத்தில் துயரத்தை மென்று செரிக்கும் ஒரு விசித்திரக் கலை... இந்த அழுகையின் சிரிப்பு! வலியில்...
இதைத் தனியாகத் திற
2
3

சுவடில்லா தடம்

மண்ணில் பதியாத பாதங்கள், மனதில் மட்டும் ஆழமாய் அழுத்திய நினைவுகள். நீரில் வரைந்த கோலமாய், காற்றில் கலைந்த மேகமாய், எவ்வித அடையாளமும் இன்றி கடந்துபோன ஒரு காதல். வந்ததற்கான சாட்சியில்லை, வாழ்ந்ததற்கான சுவடுமில்லை, ஆனாலும் உள்ளத்தின் ஆழத்தில் உறங்காமல் விழிக்கிறது சில தருணங்களில். கண்களுக்குப் புலப்படாமல், காலத்திற்கும் அழியாமல்... நீண்டு கொண்டிருக்கிறது இந்த சுவடில்லா தடம்! வடுவில்...
இதைத் தனியாகத் திற
3
4

வீழ்ச்சியின் எழுச்சி

வானளவு நிற்கும் மாமலையில், சிகரம் தொட்டுத் தொடங்கி. துள்ளிக் குதித்து, தரை தொடத் துடிக்கும் நீரின் வீழ்ச்சி. தளம் அடையும் முன், நடுவானில் காற்றிடம், கரையும் நொடியில் நீராவியாகி, வானில் கலக்கும் இவை வீழவில்லை. இயற்கையின் மாறாய் நிகழ்கிறது... இந்த வீழ்ச்சியின் எழுச்சி! நீர்வீழ்ச்சியில்...
இதைத் தனியாகத் திற
4
5

மரணத்தில் வாழ்வு

என்றும் மாறாமல் நிலைத்து வாழ்வது மரணம் மட்டுமே! நம்மால் அழிக்கவும், கடந்து போகவும், உயிர்ப்பிக்கவும் முடியாது; எதிர்கொண்டே ஆக வேண்டும்! மரணம் தன் கணக்கைத் தொடங்கி நம்மை உயிர்ப்பிக்கும் அந்த நொடியில், இவ்வுலகில் நாம் இருப்பதில்லை. நாம் வாழும் வாழ்வைக் கண்டு மரணமே நம்மை எண்ணி ஏங்கிட! தான் உயிர்த்தெழும் போதெல்லாம் நம்மிடம் அது மண்டியிட! அதற்காய்... அலைபாயும் ஆன்மாவிற்கு உள்ளிருக்கும் உயிருக்காய், உடலை நாம் போற்றி! வாழ்ந்து முடிக்க கிடைக்குமே இந்த மரணத்தில் வாழ்வு! உடல்வலிமையில்...
இதைத் தனியாகத் திற
5
6

காலத்தின் முடக்கம்

நொடிகள் நகர மறுத்து, நிமிடங்கள் உறைந்துபோக, செயலிழந்து நிற்கும் ஒரு விசித்திரப் பொழுது. கடந்த காலத்தின் நினைவுகளும் இன்றி, எதிர்காலத்தின் கனவுகளும் இன்றி, நிகழ்காலத்தின் புள்ளியில் தங்கிவிட்ட அகவெளி. சுற்றுலகம் சுழன்று கொண்டிருக்க, பிரபஞ்சம் நகர மறுத்த வெற்றுத் தருணம். துயரத்தின் கனத்திலோ , பேரின்பத்தின் திகைப்பிலோ, இயல்பு மறந்து உறைகிறது... இந்த காலத்தின் முடக்கம்! வேலைநிறுத்தில்...
இதைத் தனியாகத் திற
6
7

கனவுக்குள் தூக்கம்

விழித்திருக்கும் உலகை துறந்த, மாயம் நிறைந்ததொரு பெருங்கனவு. கனவில் நிழல்கள் நிஜமாக, களைத்துப்போன ஆன்மா மீண்டும் பெரும் மௌன பேரமைதி. சுற்றியிருக்கும் பிம்பங்கள் விலக, கற்பனையின் உச்சத்தில் தன்னைத் தொலைத்து, ஆழமாய் விழிக்கும் நிலை. நிஜத்தின் சுமைகளைத் மறந்து, கனவுக்குள்ளும் கரைந்து, உள்மனம் கேட்கும்... இந்த கனவுக்குள் தூக்கம்! நிஜத்திலும்...
இதைத் தனியாகத் திற
7
8

அர்த்தமற்ற கவிதைகள்

சொற்களின் கோர்வையில் சிக்காத ஒரு வெறுமை, பொருட்களின் தேடலில் சிதைந்து போகும் வரிகள். அர்த்தம் தேடும் விழிகள், அங்கே காணக் கிடைப்பதோ வளைந்து நெளிந்த வெற்று கோடுகள்... தர்க்கத்தின் எல்லைகளைத் தாண்டி, பகுத்தறிவுக்குப் பிடிபடாமல், கலைந்து கிடக்கும் எழுத்துக்களின் ஒழுங்கற்ற படையெடுப்பு. எப்பொருளும் கொள்ளாமல், எவ்வுணர்வும் சொல்லாமல், திசையறியாத் துணுக்குகள்... இந்த அர்த்தமற்ற கவிதைகள்! வாழ்வினில்...
இதைத் தனியாகத் திற
8
9

கோரத்தின் அழகு

வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்! யாரும் வெளிப்படுத்தாத, சொல்லவும் படாத, பொலிவை இழந்தே கிடக்கும் ஒவ்வொருவருக்குள்ளும். தூசிதட்டி பூச்சுசெய்து, வண்ணங்கள் ஆயிரம் கலந்தாலும்; ஆங்கே அழகைத் தேடினாலும், கிடைக்காத ஆழ்கடல்! அனைத்தையும் அறுத்து, வெற்று நோக்கோடு பார்ப்பின்— வெளிப்படுமே... இந்த கோரத்தின் அழகு! உனக்குள்ளும்!
இதைத் தனியாகத் திற
9
10

நிழலின் பிம்பம்

எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்... கருநிழலாக வெளிச்சத்தில் என்னைத் தொலைத்த பின்னும், இல்லாத ஒன்றை எதைக் கொண்டு நிலைநாட்ட? பகலவனால் வீசி எறியப்பட்ட நிழலைத் தத்தெடுத்த - அந்தப் பௌர்ணமியும் அறியாத மாயம்! இடத்திற்கு ஏற்றாற்போல் மாறும் நிழலும் நிஜத்தின் உருவமா? அல்லது... ஒளியைத் தடுக்கும் என் அகத்தின் அகந்தையா? வெளிச்சத்தில் தெரிவது வெறும் இருட்டல்ல; நான் சுமக்கும் சுமை, நான் மறைக்கும் ரகசியம், நான் அடையத் துடிக்கும் என் அந்தரங்கத்தின் நீட்சி! எத்தனை கோணங்களில் பார்த்தாலும், தன்னால் தன்னை உணர முடியாத... இந்த நிழலின் பிம்பம்! ஒளியிலே...
இதைத் தனியாகத் திற
10
11

விபத்தின் திட்டம்

எதிர்பாராத அதற்கு சான்றோர் இட்டபெயர் காலத்தின் சுழற்சியில் வரையறுக்கப்பட்ட மௌன வரைபடம்! தற்செயல் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் நுட்பம்; அறிவுக்குப் பிடிபடாத வெளி பேராற்றலின் கச்சித கணக்கு! தொடக்கமும் முடிவும் எங்கிருந்து என்றறியா விதியின் விளையாட்டு. குழப்பம், அதில் களைந்து போகும் வேளையில், இயற்கையின் ஏட்டில் கச்சிதமாய் எழுதப்பட்டிருக்கும் அத்தனைத் துல்லியமும்! சீரற்ற வாழ்வின் சீரான ஒழுக்கம் அதில்... இந்த விபத்தின் திட்டம்! தப்பாது...
இதைத் தனியாகத் திற
11
12

தேடலின் இழப்பு

கிடைத்தவை யாவும் நழுவ, தேடித் தேடி அலையும் தீராத அலைச்சலின் முடிவு! விடை தேடிப் பயணிக்கும் ஒவ்வொரு பாதையும் விடை கிட்டும்போது அந்தப் பயணத்தின் அர்த்தமே இல்லாமல் போகும் ஒரு முரண்! கிடைப்பது இலக்கல்ல, தேடுதலில் தொலைந்த நாம் தான்... கிடைக்காமலே இருந்திருந்தால் தேடலும் தொடர்ந்திருக்குமோ? இலக்கை அடைந்த நொடி அந்தப் பயணமே கானல்நீராகக் கரைய, மீதம் இருப்பது இந்த தேடலின் இழப்பு! தேடலில்...
இதைத் தனியாகத் திற
12
13

இயக்கத்தின் ஓய்வு

சுழலும் பிரபஞ்சத்தின் சுவடு படியாத அணுவின் துடிப்பு! இடைவிடாது ஓடும் காலத்தின் இடையில் ஒரு கணத்துத் துளி. இயக்கம் என்பது வீச்சு, ஓய்வு என்பது அதன் ஆழம்; வேகத்தின் உச்சியில் கிடைக்கும் ஒரு வினாடி மௌனப் புள்ளி! கரை சேரும் அலைகள் திரும்பிச் செல்லும் தருணமும், மூச்சுக் காற்று வெளியாகி உள்வாங்கும் அந்த இடைவெளியும் இயக்கத்தின் ஓய்வு! சலனங்கள் அனைத்தும் அடங்கி, நிசப்தம் பேசும் இந்த இயக்கத்தின் ஓய்வு! தொடக்கத்தில்...
இதைத் தனியாகத் திற
13
14

உலகின் மாயம்

கண்ணுக்குள் பிம்பங்கள், கண்டே ஏமாறும் கானல் நீரின் ஆட்டம்! பற்றும் போதெல்லாம் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, நிறுத்தத் துடிக்கும் நேரம் நழுவிச் செல்லும் நிழல்! காணாததைக் காட்டி, காணவிடாமல் செய்யும் காலத்தின் விசித்திரக் கண்ணாடி. தொட்டும் சூனியமும், விலகும் பிரம்மாண்டமுமாய் விரிந்து கிடக்கும் காட்சிப் பிழைகள்! யதார்த்தத்தின் போர்வையில் எதார்த்தத்தை மறைக்கும், இந்த உலகின் மாயம்! உள்ளுள்ளே...
இதைத் தனியாகத் திற
14
15

முற்றிலும் முற்றும்

தொடங்கிய யாவும் தொலைந்து போகும், தொடுவானம் தொட்டபின் தோன்றும் சூனியம்! எல்லாமும் அறிந்தபின் எஞ்சும் மௌனம், எல்லைகள் கடந்தபின் இல்லாத எல்லை! முடிவேயில்லாப் பயணத்தின் முழுமையான முற்றுப்புள்ளி, வார்த்தைகள் தீர்ந்தபின் வாசிக்கும் வெறுமை! அனைத்தும் கடந்து, அடைவதற்கும் ஏதுமின்றி, அடங்கிப் போகும்... இந்த முற்றிலும் முற்றும்! முடிவிலியே...
இதைத் தனியாகத் திற
15
16

மாலை மாற்று

ஆதியும் அந்தமும் ஒன்றாய் இணையும், காலத்தின் இருபுறக் கண்ணாடிப் பிம்பம்! முதலடி எடுத்து வைக்கையில் முடிவும் அங்கே முளைக்கும், முடிவிலிருந்து நோக்கின் முதலாய் வந்து நிற்கும்! வலமிருந்து இடமாய் நகரும் உலகினில், இடமிருந்து வலமாய் இயங்கும் அகவெளி. மாறி மாறி வந்தாலும் மாறாத ஒரு புள்ளியில், தன்னைத் தானே தலைகீழாய்த் தரிசிக்கும் விந்தை! எப்படி வாசித்தாலும் ஒரே பொருள் கொள்ளும், இந்த மாலை மாற்று! மையத்தில்...
இதைத் தனியாகத் திற
16
17

திசை மாற்றம்

திட்டமிட்ட பாதைகள் திசை மாறிப் போக, திசையற்ற வெளியில் தத்தளிக்கும் ஒரு பயணம்! கிழக்கைத் தேடிப் புறப்பட்டு, மேற்கில் கொண்டு சேர்க்கும், காற்றின் கைகளில் சிக்கிய காகிதக் கப்பலின் ஓட்டம்! நேர்க்கோடாய் நினைத்த வாழ்வு, வளைந்து நெளிந்து நெளிய, புதியதொரு பாதையை புதிராய் அறிமுகம் செய்யும் விந்தை. இழப்பாய் நினைத்த திருப்பங்கள், புதியதொரு இலக்கை நோக்கி நம்மை உந்தித் தள்ளும் காலத்தின் திசைகாட்டி! எதிர்பாராத பாதையில், எதிர்பார்ப்புகள் இன்றி நகரும்... இந்த திசை மாற்றம்! பயணத்தில்...
இதைத் தனியாகத் திற
17
18

வியக்கும் விந்தை

அதிசயங்கள் யாவும் அருகில் இருந்தும், அறியாமல் தேடும் அகத்தின் அசட்டுத்தனம்! பழகிய காட்சிகள் புதுமையாய்த் தோன்ற, பார்த்த விழிகளே பரிதவித்து நிற்கும் ஒரு கணம்! புதிரான உலகில் புதிராய் நாமும், விடை தெரிந்தும் கேள்வியாய் மாறும் மாயம். இயற்கையின் கோலமும், இறைமையின் லீலையும், ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் உண்மையும்! வியப்பதே வாழ்வின் விழுமியப் பொருள் என, காட்டும்... இந்த வியக்கும் விந்தை! பிரபஞ்சத்தில்...
இதைத் தனியாகத் திற
18
19

ஆடாத ஆட்டம்

எல்லைகள் இல்லா இந்த மேடையில், எவருமறியா திரைக்குப் பின் எழுந்திருக்கும் வெறி! ஆடுபவன் நானா? ஆட்டுவிப்பவன் நீயா? விதி என்னும் கயிற்றில் பிணைக்கப்பட்ட பொம்மைகளின் திசைமாறிய அசைவுகள்! விழுந்தும் எழாத பிம்பங்கள், நின்றும் நிலைக்காத நிழல்கள், சுற்றிச் சுழலும் காலத்தின் வன்முறை! வலியும் சுகமும் கலந்திருக்கும் இந்தத் தாளத்தில், தேவைக்கு மிஞ்சிய வெற்றுச் சலனங்கள்! திரை விழும் நொடி வரை நிறுத்தத் துடிக்கும்... இந்த ஆடாத ஆட்டம்! வாழ்வினில்...
இதைத் தனியாகத் திற
19
20

அறத்தின் ஆற்றல்

அநீதியின் புயல் வீசும் அனல் மிகுந்த காலத்திலும், அசையாது நின்றிருக்கும் அறத்தின் மெல்லிய வேர்! வெற்றியின் ஆரவாரத்தில் வீழ்ந்து போகாத நிமிர்வு, தோல்வியின் இருளில் தொலைந்து போகாத சுடர்! சத்தமில்லாமல் செய்யும் சரியான செயலொன்று சமூகத்தின் வேர்களை சீராய் வளர்க்கும் ஊக்கமது. ஆயுதம் ஏந்தாத போர்; அதிகாரம் வேண்டாத வெற்றி; காலத்தின் சுழற்சியிலும் கறை படியாத தூய்மை! விதிமுறைகளை மீறியும் விதி வகுக்கும் பேராற்றல்... இந்த அறத்தின் ஆற்றல்! அகத்தினில்...
இதைத் தனியாகத் திற
20
21

சிந்தனை துகள்

கடல் முழுவதையும் கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க முயலும் அற்பத்தனமான ஆசை! பெருவெளியின் தத்துவத்தை சிறியதொரு அணுவின் முனையில் தேடும் தவிப்பு... பிரித்துப் பார்த்தால் புரியாத புதிர்; சேர்த்து வைத்தாலோ அர்த்தமற்ற பிதற்றல்! ஆயிரம் கோணங்களில் அலசி ஆராய்ந்தும், பிடிபடாத பேருண்மை... ஆழமான மௌனத்தின் நுனிநாக்கில் ததும்பும் இந்த சிந்தனை துகள்! உள்ளூற...
இதைத் தனியாகத் திற
21
22

உளியின் வலி

கல்லை உடைக்கும் போது அறிவதில்லை பாறை; உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே, உருவாகும் தெய்வத்தின் விளிம்பு! வலியென்று கூச்சலிடும் சிற்பத்தின் தவிப்பு— சிதைக்கப்படுவதல்ல, செதுக்கப்படுவதைக் காணும் மௌனக் கண்கள்! துண்டிக்கப்படும் கற்கள் அழுகையின் அடையாளம் அல்ல; அழகின் தேடலுக்காக, அகற்றப்படும் தேவையற்ற சுமை! உளியின் ஒவ்வொரு தழும்பும் ஓர் ஓவியத்தின் பிறப்பு; தாங்கிக் கொள்ளும் வலி— தன்னைக் கரைத்து தெய்வமாய் ஆவதற்கான தவக் காலம்! வலித்த போதெல்லாம் வடிவம் பெறுவது; இந்த உளியின் வலி! விந்தையில்...
இதைத் தனியாகத் திற
22
23

பக்தியின் முக்தி

வெளிப்புறச் சடங்கின் வெற்றுப் படலங்கள் விலக, உள்ளே உறையும் உண்மையின் தரிசனம்! கண்ணாடி முன் நின்று கரைந்து போகும் பிம்பம்போல், அடையாளம் துறந்து அப்பாலாய் விரியும் மாயம். வேண்டிக் கிடக்கும் விழைவுகள் ஒழிய, வேண்டாமையே வரமெனக் கொள்ளும் அந்நிலை! முட்டி மோதித் தேடிய கடவுள் வடிவம், முற்றுமுழுதாக தன்னுள் ஒளிர்ந்தறியும் விந்தை. தன்னைக் கடந்து தாணுவாய் விரியும்... இந்த பக்தியின் முக்தி! தனிமையில்...
இதைத் தனியாகத் திற
23
24

கல்வியில் கேள்வி

புத்தகப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் விடை; கேள்வி கேட்கும் அறிவோ கேள்வியாய் நின்று தவிக்கும்! தெரிந்ததைச் சொல்வது கல்வியல்ல; தெரியாததைத் தேடிப் பிடிப்பதே அறிவின் உண்மையான தேடல்! கேள்விகள் அற்ற கல்வியோ கடல் இல்லாத நதி; மக்கிக் கிடக்கும் தகவல்கள் மனப்பாடம் செய்யும் சுமை! ஏன்? எப்படி? எதற்கு? என்ற சிறு நெருப்பு— புரியாத உண்மைகளை புடம் போட்டு காட்டும். பதில் சொல்வதை விட கேள்வி கேட்பதிலேயே விளங்குகிறது... இந்த கல்வியில் கேள்வி! முதிர்ச்சியில்...
இதைத் தனியாகத் திற
24
25

புதிரின் புதிர்

விடை காண முயலும் விசித்திரமான வேட்கை; ஒவ்வொரு விடைக்குள்ளும் ஒளிந்திருக்கும் புதிய கேள்வி! முடிச்சு அவிழ்க்கத் துடிக்கும் முரணான கரங்கள், அவிழ அவிழத் தோன்றும் ஆழமான முடிச்சுகள்! புதிர் என்பது கேள்வியல்ல, நம்மை நாமே வினாக்குறியால் துளைத்துப் பார்க்கும் கண்ணாடி. தெரியாதது ஒன்றும் இல்லை, தெரிந்ததில் புரியாதது தான் இந்த பிரபஞ்சத்தின் மர்மமான சங்கிலி! விடை தேடும் படலம் வினாவிட... இந்த புதிரின் புதிர்! புரிதலில்...
இதைத் தனியாகத் திற
25
26

ஆட்டத்தின் ஆட்டம்

நகர்த்தும் கைகளில் நடுங்கும் காய்கள்; மேடையின் விதிகளோ முடிவற்ற நுணுக்கங்கள்! வெற்றி தோல்வி என்பன வெறும் கணக்கீடுகள்; நிஜமான விளையாட்டு திரைக்குப் பின்னே நடக்கும் நிழல்களின் கூத்து! ஆடுபவன் மறந்தே போகிறான் தானும் ஒரு காயென! ஆட்டம் முடிந்து திரை விலகும் போது அறியும் உண்மையை, எவரும் வெல்லவில்லை என்று! எல்லாம் தெரிந்தே ஏமாறும் விந்தை; விதி விளையாடும் இந்த ஆட்டத்தின் ஆட்டம்! சுழியில்...
இதைத் தனியாகத் திற
26
27

அகத்தின் புறம்

வெளியே தெரியும் பிம்பம், உள்ளே உறையும் நிழலின் ஒற்றைப் பிரதிபலிப்பு! தோற்றம் காட்டத் துடிக்கும் வண்ணங்கள் அனைத்தும், ஆழத்தில் அடங்கியிருக்கும் கருமையின் சிறு துளிகள். பேசும் வார்த்தைகள், மெளனத்தின் மேலுறைகள்; செயல்பாட்டின் வேகங்கள், நிசப்தத்தின் அலைவீச்சுகள்! அகம் என்னும் மர்மக் குகையில் சத்தமில்லாமல் எரியும் தீபம், புறம் என்னும் திரையில் நிழல்களாய் விரிந்து கிடக்கும். காண்பவை யாவும் கனவின் வெளிப்பாடுகள்; உண்மையின் மறுபக்கம் இந்த அகத்தின் புறம்! மறைவில்...
இதைத் தனியாகத் திற
27
28

குழலின் புயல்

மென்மையான இசையின் மறைவில் ஒளிந்திருக்கும் மௌனத்தின் பேரிரைச்சல்! மூச்சுக்காற்று தொடும்போது தவமிருக்கும் துளைகள், திறக்கும் போதெல்லாம் சிதறி விழும் ராகத்தின் தீராத கோபங்கள்! இனிய கீதத்தின் பின்னே புதைந்திருக்கும் சூறாவளி, எல்லை மீறத் துடிக்கும் நாதத்தின் அலைகள்! கேட்பவருக்கு மயக்கம், இசைப்பவருக்குத் தவிப்பு; நுண்ணிய துளை வழியே வெளிப்படும் மகா பிரளயம்! அமைதிக்குள் மறைந்திருக்கும் ஆக்ரோஷத்தின் வடிவம்... இந்த குழலின் புயல்! மூங்கிலில்...
இதைத் தனியாகத் திற
28
29

சொற்களின் பற்கள்

மென்மையாகத் தீண்டினாலும் வலியெடுக்கும் வன்மம், இதழ்களின் மறைவில் ஒளிந்திருக்கும் கூர்மை! பேசும் வார்த்தைகள் புன்னகையாய் விரிய, உள்ளே உறையும் பற்களோ பதம் பார்க்கும்! மென்று விழுங்கும் எண்ணத்தின் வேகம்; முறிக்கத் துடிக்கும் மௌனத்தின் மௌனம்; கடித்த பின்னே சுவைக்கும் நிசப்தம்! புண்படுத்தும் சொற்களைத் தேய்த்துத் தேய்த்து அறம் என்னும் கல்லில் அரைத்தெடுத்து வைப்பேன்! இனிமையின் முலாம் பூசி ஈட்டி போல் பாயும்... இந்த சொற்களின் பற்கள்! வாக்கினில்...
இதைத் தனியாகத் திற
29
30

வெட்கத்தின் கூச்சம்

கன்னங்களின் சிவப்பில் காதல் பூக்கும் வசந்தம்; சொல்லத் துடிக்கும் வார்த்தை நாக்கின் நுனியில் முட்டி, மீண்டும் மௌனமாய் வடியும்! பார்வை படரும் இடங்களில் பதற்றத்தின் நடுக்கம்; எதிர்பார்ப்பின் நிழலில் ஒளிந்து கொள்ளும் அகந்தை! உடலெங்கும் படர்ந்திருக்கும் மின்னல் கீற்றின் ஜாலம், சொல்லித் தீராத ஏதோவொன்று சொல்லில் சிக்காமல் திணறும்! ஆயிரம் பேசிப் பழகினாலும் அருகில் வந்ததும் மறக்கும் அந்தத் தேன் துளி! நடுக்கத்தின் விளிம்பில் நிமிர்ந்து பார்க்கும்... இந்த வெட்கத்தின் கூச்சம்! விழிகளில்...
இதைத் தனியாகத் திற
30
31

வாடிக்கையின் வேடிக்கை

இயந்திரத் தாளமிடும் தினசரிச் சுழற்சி; நேற்றைய விடியலின் அதே தொடர்ச்சி! காலத்தின் கட்டாயத்தில் கைதி ஆனோம், பழக்கத்தின் சங்கிலியில் பணிந்து போனோம்! மாற்றம் தேடும் மனம் மழுங்கிப் போக, வாழ்க்கை என்பது வேடிக்கையாய் மாறிய வாடிக்கை! எதிர்பார்ப்பு ஏதும் இல்லா ஏகாந்தப் பயணத்தில், சலிப்பின் விளிம்பில் சிரித்து நிற்கும் இந்த வாடிக்கையின் வேடிக்கை! நித்தியத்தில்...
இதைத் தனியாகத் திற
31

நூல் நிறைவுற்றது.

பட்டியல்

விளிம்பைத் தொடுங்கள், அல்லது ← → விசைகள். கைபேசியில் இழுத்துப் புரட்டலாம்.