செய்ந்நன்றி முழக்கம் 10 படைப்புகள்

செய்ந்நன்றி முழக்கம்

செய்ந்நன்றி செய்ந்நன்றி உணர்வோம் செய்ந்நன்றி! செய்ந்நன்றி செய்ந்நன்றி உரைப்போம் செய்ந்நன்றி!

10 படைப்புகள்

செய்ந்நன்றி செய்ந்நன்றி உணர்வோம் செய்ந்நன்றி! செய்ந்நன்றி செய்ந்நன்றி உரைப்போம் செய்ந்நன்றி!
1

செய்ந்நன்றி - 1

மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
அரிய மனிதப் பிறவியை இந்த உலகத்தில் பெற்று, தேன் போன்ற இன்பம் தரும் ஈசனைப் போற்றித் துதிக்கும் நல்வரத்தைப் பெற்றேன். உடலிலும் உயிரிலும் அன்பினால் உருகி, உமையொருபாகனின் பொன்னார் திருவடிகளை நாள்தோறும் தொழுது ஏத்துவதே எனக்குக் கிடைத்த இணையற்ற பெரும் பேறாகும்.
இதைத் தனியாகத் திற
1
2

செய்ந்நன்றி - 2

ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
எந்த ஒரு குறையும் இல்லாத முழுமையான உடலை எனக்கு அளித்தாய்; நான் நல்வழியில் வாழ்ந்து உய்வதற்காக, எவ்வித மாசும் குறையும் இல்லாத தூய்மையான உள்ளத்தையும் அளித்தாய். தேன் போன்ற இனிமையான சிவனே! உன்னை நாள்தோறும் போற்றித் துதிக்கும் இந்தச் சிறப்பான பாக்கியத்தையும் நீயே எனக்கு மகிழ்ந்து வரமாக அளித்தாய்
இதைத் தனியாகத் திற
2
3

செய்ந்நன்றி - 3

இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
சிவபெருமானே! நானும் என் குடும்பமும் (இல்லமும்) எந்தக் குறையுமின்றி இனிமையாக வாழ்வதற்காக உன்னுடைய நல்லருளை எங்களுக்கு வழங்கினாய். இந்த உலகத்தில் எங்களது துன்பங்களை எல்லாம் தீர்த்து எங்களைக் காக்கும் பாதுகாப்பு அரணாக நீயே எப்போதும் உடனிருப்பதால், எல்லாத் தடைகளையும் வென்று நலம்தரும் உனது மாபெரும் பாதுகாப்பைப் பெறும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது
இதைத் தனியாகத் திற
3
4

செய்ந்நன்றி - 4

கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
என்னுடைய கற்றல் மேன்மேலும் சிறந்து விளங்குவதற்காக, அழகுமிக்க தொடர் கல்வியினை எனக்குப் பற்றுக்கோடாகத் தந்தாய் பரமேஸ்வரா! நான் செய்த நல்ல தவத்தினால், இத்தொடர் கல்வியால் வந்த பெருமையைப் பேரின்பமாகவே உணர்கிறேன். சிவனே! இதனை என் வாழ்வின் மாபெரும் பாக்கியமாக நான் பெற்றேன்.
இதைத் தனியாகத் திற
4
5

செய்ந்நன்றி - 5

ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
என்னுடைய வாழ்நாள் முழுவதும், எனக்குத் தேவையான பாதுகாப்பான அரவணைப்பை அன்போடு தந்து, உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆழமான உயிரன்பால் என்னைச் சிறப்பாக வளர்த்தார்கள் என் தாய் தந்தையர். அத்தகைய பெருமையுடன் போற்றுதலுக்கு உரிய நற்பெற்றோரை நான் பாக்கியமாகப் பெற்றேன். சிவனே! இந்த அரிய வரத்தை நீயே எனக்குச் சிறப்பாக அளித்தாய்
இதைத் தனியாகத் திற
5
6

செய்ந்நன்றி - 6

உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
எந்தக் குறைவுமில்லாத முழுமையான உடல் ஆரோக்கியமும், இவ்வூரும் உலகமும் போற்றக்கூடிய மேலான சிந்தனைகளும், குற்றமற்ற நற்குணங்களும் தம்மிடம் ஒளிரும் வண்ணம்; சிறந்த தவத்தின் பயனாக, கல்வியறிவால் மேலோங்கும் கண்ணியமிக்க நற்பிள்ளைகளை எனக்கு அருளினாய். நன்மைகள் பல புரியும் சிவனே! இந்தச் சிறந்த மக்கட்பேற்றினை நான் பெருவரமாகப் பெற்றேன்
இதைத் தனியாகத் திற
6
7

செய்ந்நன்றி - 7

உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
வாழ்க்கைக்குத் தேவையான உலக அறிவுகளை எங்களை மேலோங்கச் செய்யும் ஏற்றத்தைப் போலக் கற்பித்து; நாங்கள் வாழும் காலம் முழுவதிலும் எங்களுக்கு ஒரு நல்ல துணையாக உடனிருந்து சிறப்பான வழிகாட்டுதலை வழங்கும் மேன்மக்களாகிய நல்ல குருமார்களை நான் வரமாகப் பெற்றேன். நன்மைகள் பல அருளும் சிவபெருமானே! இது நீயளித்த மாபெரும் பாக்கியமாகும்.
இதைத் தனியாகத் திற
7
8

செய்ந்நன்றி - 8

செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
எங்களை வீழ்த்த நினைக்கும் பகைவர்களை (செற்றலரை) அருகில் கூட நெருங்க விடமாட்டார்கள்; ஏதேனும் துன்பம் வந்தடையும் காலங்களில், மிகவும் பொருத்தமான உறுதுணையாகித் தமது உள்ளன்போடு எனக்காகக் கேடயமாக முன் நிற்பார்கள். அத்தகைய மகத்தான உடன்பிறப்புகளை நான் செய்த நல்ல தவத்தினால் எனது சுற்றமாகப் பெற்றேன். நன்மைகள் பல அருளும் சிவபெருமானே! எனக்குக் கிடைத்த இந்த உறவு, நீ அளித்த மாபெரும் பாக்கியமாகும்.
இதைத் தனியாகத் திற
8
9

செய்ந்நன்றி - 9

உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
என் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கவும்; எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அந்த நினைப்பு வந்த மறுகணமே அங்கு தடையின்றிச் செல்லவும் ஏற்ற, ஒரு நல்ல துணையாக இருக்கக்கூடிய ஆற்றல்மிக்க நன்மனதை எனக்குப் பெரும் கருணையோடு நீ வழங்கினாய். நன்மைகள் பல அருளும் சிவபெருமானே! சுதந்திரமாகச் செயல்படும் இந்த மனதை, நீ அளித்த மாபெரும் பாக்கியமாக நான் பெற்றேன்.
இதைத் தனியாகத் திற
9
10

செய்ந்நன்றி - 10

கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
நான் முறையாகக் கற்றுக்கொண்ட எனது தொழிலை, மிகுந்த விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்ததனால், எனக்கு வந்து சேர்ந்த பெரும் செல்வமானது அளவின்றிச் பெருகிச் சிறந்தது. நான் செய்த நற்றவத்தின் பயனாக, எனது வாழ்வில் எவ்விதக் குற்றமுமில்லாமல், ஒரு குறையுமின்றி நிறைவான செல்வத்தோடு வாழும்படியான இந்த மாபெரும் பாக்கியத்தை, நன்மைகள் அருளும் சிவபெருமானே, நான் உன்னிடமிருந்தே பெற்றேன்.
இதைத் தனியாகத் திற
10

நூல் நிறைவுற்றது.

பட்டியல்

விளிம்பைத் தொடுங்கள், அல்லது ← → விசைகள். கைபேசியில் இழுத்துப் புரட்டலாம்.